நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக கவாலர்கள் வளைகாப்பு நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் செட்டிகுளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதையடுத்து காவலர் திவ்யா கர்ப்பம் அடைந்த நிலையில், ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து பணகுடி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கர்ப்பிணியாக காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற திவ்யாவுக்கு காவல் நிலையத்தில் வைத்தே வளைகாப்பு நடத்த பணகுடியில் பணிபுரியும் சக காவலர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் அருண் ராஜா தலைமையில் திவ்யாவுக்கு வளைகாப்பு வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினர். வீட்டில் உறவினர்கள் நடத்துவதை போன்று திவ்யாவுக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம் குங்குமம் வைத்து விருந்து உபசாரம் செய்து குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர்.
திடீரென தனக்கு நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வை எண்ணி காவலர் திவ்யா இன்ப அதிர்ச்சி அடைந்தார். காவல் நிலையத்தில் வளைகாப்பு நடந்த நிகழ்வு சக பெண் காவலர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM