காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் புதிய தீவிரவாத அமைப்பு: திடுக்கிடும் தகவல்

காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பல படுகொலைகள் “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” என்கிற புதிய அமைப்பால் அரங்கேற்றப்பட்டவை என காஷ்மீர் போலீஸ் தகவல் அளித்துள்ளது.

லஸ்கர், ஜெய்ஷ் போல அல்லாமல், ‘காஷ்மீர் சுதந்திர போராளிகள்’ அமைப்பின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதால், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை படைகளை போல இல்லாமல், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிகளை பயன்படுத்தி மிகவும் அருகிலிருந்து சுட்டு பலர் உயிரை பலி கொண்டுள்ளனர். அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் நுழைந்து கொலைவெறி தாக்குதல்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என காஷ்மீர் போலீசார் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைகளில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆகவே இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காஷ்மீர் பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் இளைஞர்களாக இருக்கலாம் என உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

image
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தது ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் மற்றும் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

‘காஷ்மீர் ஃபிரிடம் ஃபைட்டர்ஸ்’ என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பு சமீபத்தில் அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரி, போலீஸ் அதிகாரி, ஆசிரியர், கலைஞர் என பல சாதாரண மக்களை சுட்டுக்கொன்றுள்ளது. காஷ்மீர் போலீஸ் தகவல்படி, “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” அமைப்பால் கொல்லப்பட்டோர் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை சேராதோர் என்பது குறிப்பிடத்தக்கது.

* அரசு ஊழியர் ராகுல் பட் தனது அலுவலகத்தில் மே 12ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார்.

*மதுக்கடை ஊழியர் ரஞ்சித் சிங் மே 17ஆம் தேதி கையெறி குண்டு வீசி கொல்லப்பட்டார்

* நடிகை அம்ரீனா பட் மே 25ஆம் தேதி தனது வீட்டு வாசலில் சுட்டு கொல்லப்பட்டார்

* பள்ளி ஆசிரியை ராஜ் பாலா மே 31ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார்

* வங்கி அதிகாரி விஜய் குமார் ஜூன் 2ஆம் தேதி தனது வங்கியில் சுட்டு கொல்லப்பட்டார்.

image
இதில் ஒரு சில கொலைகளை தாங்கள் செய்ததாக இந்த அமைப்பே ரகசிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், வேறு பல கொலைகளையும் இந்த புதிய தீவிரவாத அமைப்பு அரங்கேற்றி உள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கோவிட்-19 முழுமுடக்கம் என சட்டம்-ஒழுங்கு சூழல் பெரும்பாலும் கட்டுக்குள் இருந்தது. அந்த சமயத்தில் இணையத்தளம் மூலம் இளைஞர்களை  “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” தீவிரவாத அமைப்பு அணுகி அவர்களில் பலரை மூளை சலவை செய்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

– கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்கலாம்: ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுக்கோட்டையை சேர்ந்தவர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.