கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்கும் அவரது மனைவிக்கும் மகளுக்கும் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்
இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழி கடத்தப்படவிருந்த 14 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள தங்கம் ஒன்றிய சுங்கத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரித்குமார் என்பவரும் ஸ்வப்னா சுரேஷும் கைதுசெய்யப்பட்டனர்.
கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோரின் பெயர்கள் இதில் அடிபட்டன. இந்தக் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த வழக்கில் ஜாமினில் இருக்கும் சுவப்னா சுரேஷ், இந்த வழக்கை விசாரித்து வரும் பண மோசடி தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் இந்தியத் தண்டைனைச் சட்டம் 164இன் படி தான் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கோரினார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கொச்சி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்ற முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளிக்கலாம் என உத்தரவிட்டது. நேற்று முதற்கட்ட வாக்குமூலத்தை அளித்தார் ஸ்வப்னா. தொடர்ந்து இன்று அளிக்கவிருக்கும் வாக்குமூலத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றுள்ளவர்களின் பெயர்களைச் சொல்வேன் எனச் சொல்லியிருந்தார். வாக்குமூலம் அளித்த பிறகு அந்தப் பெயர்களை பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்துவேன் எனவும் கூறியிருந்தார்.
இன்று வாக்குமூலம் அளித்து வெளிவந்தபோது, “இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல், முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், செயலாளர் ரவீந்திரன், அதிகாரி, நளினி ஆகியோருக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு உள்ளது என்பதைத் தெரிவித்துள்ளேன்” எனக் கூறினார்.
கேரள முதல்வர், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்ட பலருக்கும் இந்தில் தொடர்பு இருப்பதாக முன்பே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த வாக்குமூலம் கேரள அரசியலில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.