சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகைகள், பணம் என ரூ.20 லட்சத்துக்கு மேல் இழந்த இளம்பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பவானி (29). இவர் கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். இவருக்கும் பாக்கியராஜ் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள்உள்ளனர். பழைய மகாபலிபுரம்சாலை, கந்தன்சாவடியில் உள்ளஹெல்த்கேர் சென்டரில் பவானி பணியாற்றி வந்தார்.
ஒரு வருடத்துக்கு முன்பு பவானிக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பவானி வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மி தொடர்பாக வரும் விளம்பரங்களும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
சகோதரிகளிடம் கடன்
இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை வாங்கி பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார். அவரது ஆசையை மேலும் தூண்டும் விதமாக, ஆன்லைன் ரம்மி மூலம் முதலில் சிறிய தொகை கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், விரைவில் அதிக பணம் சம்பாதித்து விடலாம் என்ற வேட்கையில் தன்னிடம் இருந்தபணம் முழுவதையும் வங்கிக்கணக்கில் செலுத்தி ஆன்லைன்ரம்மி விளையாட ஆரம்பித்துள்ளார். அந்த பணம் முழுவதையும் இழந்துள்ளார்.
இதையடுத்து, தனது இரு சகோதரிகளிடமும் தலா ரூ.1.5 லட்சம் என ரூ.3 லட்சம் கடனாகப் பெற்று, அந்த பணத்தையும் மொத்தமாக இழந்துள்ளார். தனது 20 பவுன் நகைகளை அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தையும் வங்கிக் கணக்கில் செலுத்தி, ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த பணத்தையும் பவானி இழந்துள்ளார்.
இப்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக பவானி ரூ.20 லட்சத்துக்கு மேல் பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தில் பிரச்சினை
இதனால், பவானியை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு பவானியின் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பவானி மிகவும் சோர்வான நிலையில் இருந்துள்ளார். மன அழுத்தம் ஏற்பட்டு குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து விலகி தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஆரம்பித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்தது குறித்து,அண்மையில் தனது தங்கையிடம்கூறி பவானி மிகவும் வருந்தியுள்ளார். ‘பணம் போனது போகட்டும், இனி இதுபோல் விளையாடாதே’ என அவரது சகோதரி ஆறுதல் கூறியுள்ளார். இருப்பினும், பவானிவிரக்தியடைந்த நிலையிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குளித்துவிட்டு ஆடைகளை மாற்றி வருகிறேன் என்று கூறிவிட்டு, படுக்கை அறைக்குச் சென்ற பவானி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கணவர், கதவை திறந்து பார்த்தபோது அங்கு பவானி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
கதறிய குடும்பத்தினர்
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பாக்கியராஜ், மனைவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பவானி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த ஆண்கள் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், குடும்பத் தலைவியாக இருந்த பெண் ஒருவர் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற விளையாட்டை முற்றிலும் தடைசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது மேலும் வலுத்துள்ளது.
டிஜிபி அறிவுரை
ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் வெற்றி பெறுவதுபோல ஆசையைத் தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளம்பரங்களில் வருவதைப் பார்த்து யாரும்இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளவேண்டாம். இது உண்மையான விளையாட்டு அல்ல. மோசடி விளையாட்டு. இதை புரிந்துகொண்டு இந்த விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இதனால், பணம் நஷ்டம், அவமானம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். உயிரை இழக்கும் சூழலும்உள்ளது. எனவே, ரம்மி விளையாட்டு வேண்டவே வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதேபோல சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.