சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தன் மீதான வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ளமத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும்என்று மதுரை ஆதீனம் குறிப்பிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ‘‘ஆதீனத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. அறநிலையத் துறை என்பது புனிதமானது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அவர்களுக்கு பிறகு எங்கள் ஆட்சிக் காலத்திலும் அறநிலையத் துறை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. இப்போது அங்கு விளம்பர அரசியல் நடக்கிறதே தவிரஆக்கப்பூர்வமான எதுவும் நடக்கவில்லை’’ என்றார்.
அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று சசிகலா தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ஜெயக்குமார் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறுவதை நீதிமன்ற அவமதிப்பாகத்தான் கருத முடியும். அவரது கருத்தை மக்களும், அவரது கட்சியினருமே பொருட்படுத்துவதாக இல்லை. அமமுகவில் இருந்து அனைவரும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
சசிகலாவைப் பொருத்தவரை பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார். அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகமக்கள், தொண்டர்கள் விரும்பாதசக்தி சசிகலா. அந்த தீய சக்தியை எந்த நிலையிலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.பாஜக வேண்டுமானால் சசிகலாவை சேர்த்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.