சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆக்கப்பூர்வமாக இல்லை. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பவுடர், சந்தை விலையைவிட குறைவான விலைக்கே வாங்கப்படுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.13 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கண் பரிசோதனை மையம், ரூ.18 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் உடல்நலம் சார்ந்து பயன்படுத்துவதில்லை என்பதால், அதிமுக ஆட்சியில் இருந்து ரூ.18 ஆயிரத்தில் 10 சதவீத தொகைக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கிதரப்படுகிறது. இதில், ஐசிஎம்ஆர், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள ‘பிரோ பி.எல்’ என்ற ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. இதன் சந்தை விலை ரூ.588. தமிழக மருத்துவ பணிகள் கழகம் அவற்றை ரூ.460.50-க்கு வாங்கியது. சந்தை விலையில் இருந்து ரூ.127.50 குறைவாக வாங்கப்பட்டுள்ளது. அயன் சிரப் சந்தை விலை ரூ.112. அதை ரூ.74.60-க்கு வாங்கியதால் ரூ.37.40 மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகள் பொருட்கள் கொள்முதல் செய்யாமல் ரூ.450 கோடி அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாரிடம், என்ன விலையில் வாங்கப் போகிறோம் என்பதை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் தொழில்நுட்பக் குழு முடிவு செய்யவில்லை. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஆக்கப்பூர்வமாக இல்லை. மருத்துவ துறை மீது ஒரு குற்றச்சாட்டு வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொய் குற்றச்சாட்டு பற்றியும் அவர் உணர வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை செயலர் கூறும்போது, ‘‘ஏற்கெனவே பொருட்களை வழங்கி வந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்துள்ளது. புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் முடியாத நிலையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை. ஆவினில் வாங்க வேண்டியதைத்தான் வாங்க வேண்டும். அவர்களின் குற்றச்சாட்டு என்பது ஆப்பிளை ஆரஞ்ச், எலுமிச்சை பழத்துடன் ஒப்பிடுவது போன்றதாக உள்ளது. ‘பேபி கிட் கேர்’க்கு ஆவினில் இருந்துதான் நெய் வாங்குகிறோம். ஆவினிலும் இலவசமாக எதுவும் தருவதில்லை’’ என்றார்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக இயக்குநர் தீபக் ஜேக்கப் கூறும்போது, ‘‘ஒப்பந்தம் விடுவதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. குறைந்த அளவில் ஒப்பந்தம் கோரும் நிறுவனங்களுக்குத்தான் வழங்கப்படும். அவ்வாறு ஒப்பந்தம் அளிக்கப்படும் நிறுவனங்களின் ஊட்டச்சத்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, தர உறுதி செய்யப்பட்ட பிறகுதான், அவர்களுக்கு இறுதியாக ஒப்பந்தம் அளிக்கப்படும்’’ என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, ‘‘பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள், சிசு உயிரிழப்பை தடுக்க 32 சத்துக்கள் அடங்கிய ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. ஆவினில் பால் பவுடர்தான் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்குத் தேவையான 32 சத்துக்கள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையான சத்துமாவு வழங்கினால், அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து உறுதிப்படுத்த முடியும்’’ என்றார்.