சாலைக்கு கோட்சே பெயர்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் போலோ கிராமம். இந்த கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற குற்றவாளி நதுராம் கோட்சேவின் பெயர் கொண்ட பலகையை அந்த சாலைக்கு மர்ம நபர்கல் சிலர் வைத்துள்ளனர்.

கர்நாடக எரிசக்தி அமைச்சர் சுனில் குமாரின் தொகுதியில் உள்ள போலோ கிராம பஞ்சாயத்தில் சாலையோரத்தில் இந்த பெயர் பலகையில், மாநிலம் முழுவதும் உள்ள ஜில்லா பஞ்சாயத்துகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் அதே வண்ணங்கள் மற்றும் எழுத்துருக்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த பலகையை வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பலகை அரசாலோ அல்லது ஊராட்சி அதிகாரிகளாலோ நிறுவப்படவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் சுனில் குமார், சில விஷமிகள் இந்த செயலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலா கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திங்கள்கிழமை காலை இந்த வழிகாட்டி பலகை தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதை யார் வைத்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். “சாலைக்கு கோட்சே பெயர் சூட்ட பஞ்சாயத்தோ, அதிகாரிகளோ எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து கார்கலா ஊரக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “நாங்கள் உள்ளூர்வாசிகள் சிலரிடம் பேசியபோது, இது இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பதை நாங்கள் அறிந்தோம், ஆனால் அந்த பெயர் பலகையை யாரும் கவனிக்கவில்லை. இது திங்கள்கிழமைதான் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.