சென்னை: அண்ணா நகர் டவர் பூங்கா சீரமைப்பு பணிகள் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி துணை மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் தனியாரிடமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட டவர் பூங்காவானது தத்தெடுப்பு முறையில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த டவர் பூங்காவில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து துணை மேயர் மகேஷ் குமார் இன்று (07.06.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, டவர் பூங்காவினை நாள்தோறும் பயன்படுத்தும் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூங்காவில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், அங்குள்ள செடிகள், கொடிகள் மற்றும் மரங்களுக்கு நாள்தோறும் நீர் பாய்ச்சவும் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மூலம் விருப்பம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மரம், செடி, கொடிகளை பராமரிக்க தண்ணீர் தொட்டி அமைப்பது, குழாய்கள் பொருத்துதல் போன்ற பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாறு துணை மேயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.