சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் தாமோதரன் என்பவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்திவருகிறார். சம்பவத்தன்று இவர், பெட்ரோல் பங்க்கை அதிகாலையில் திறந்தபோது மேனேஜர் அறையின் கதவு உடைக்கப்பட்டு பத்தாயிரம் ரூபாய், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க்கையொட்டி உள்ள ஜெயபிரகாஷ் என்பவரின் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு மூவாயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த மதன் (21) என்கிற லொட்டை மதன், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கௌதம் குமார் (18), 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் இவர்கள் திருவள்ளூரில் பைக்கைத் திருடி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து லொட்டை மதன், கெளதம் குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் போலீஸார் சேர்த்தனர். கொள்ளையர்களிடமிருந்து செல்போன், 4,000 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “கைதான மதன்மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் சிறையிலிருந்து அவர் வெளியில் வந்திருக்கிறார். கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு ஹோட்டலில் அறை எடுத்த மூன்று பேரும் மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர்.
பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது அது திருவள்ளூரில் திருடப்பட்டது எனத் தெரிந்ததும் செல்போன் சிக்னலைவைத்து இளைஞர்கள் மாமல்லபுரத்தில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தோம்” என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கைதானவர்களிடம் விசாரித்தபோது அம்மா சத்தியமாக 4,000 ரூபாயும் செல்போனை மட்டுமே திருடினோம் எனக் கூறினர். ஆனால் அவர்கள் பொய் சொல்லியதை சிசிடிவி மூலம் தெரிந்துகொண்டோம். திருவள்ளூர், தாம்பரத்தில் இரண்டு இடங்கள் என அடுத்தடுத்து மூன்று பேரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி-யில் மூன்று பேரும் ஒரே பைக்கில் சென்றது தெரியவந்ததுதான் இந்த வழக்கை எளிதாக துப்புத்துலக்க முடிந்தது” என்றார்.