சென்னை, ஆயிரம் விளக்கு சுதந்திரா நகர் பி.பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் மோகா என்கிற மோகன் (23). இவர் கடந்த 5-ம் தேதி நள்ளிரவில் புதுப்பேட்டை ஐயாசாமி தெரு குடிசைப் பகுதியில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 6 பேர்கொண்ட கும்பல், மோகனைச் சுற்றி வளைத்தது. அதனால் மோகன், அவர்களிடமிருந்து தப்பிக்க தெருவுக்குள் ஓடினார். பின்னர் ஒரு வீட்டுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்தக் கும்பல் மோகனை கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து தகவலறிந்த எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மோகனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த விக்ரம் (20), விக்னேஷ் (21), வெங்கடேஷ் என்கிற யூடியூப் (20), நரேஷ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் 17 வயது சிறுவனும் இந்த வழக்கில் பிடிப்பட்டுள்ளான். இவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததது தெரியவந்தது.
“கொலைசெய்யப்பட்ட மோகன்மீது எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மோகனுக்கும் ரௌடி புறா வெங்கடேசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அந்த மோதலில் மோகன் தரப்பும் புறா வெங்கடேசன் தரப்பும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதுண்டு. இந்தச் சூழலில் புறா வெங்கடேசன் தரப்பை மோகன் தரப்பு தாக்கியுள்ளது. அதற்கு பழிவாங்க புறா வெங்கடேசன் கூட்டாளிகள் காத்திருந்துள்ளனர்.
சம்பவத்தன்று மோகன், புதுப்பேட்டையில் பிறந்த நாள் விழாவுக்காக வந்துள்ளார். பின்னர் அவர் மது அருந்தியிருக்கிறார். இது குறித்து தகவலறிந்ததும் புறா வெங்கடேசனின் கூட்டாளிகள் அங்கு வந்து மோகனைக் கொலைசெய்துள்ளனர். இந்த வழக்கில் 5 பேரைக் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
சென்னையில் முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.