‘டான்’ முதலில் தனக்கு வந்த படம் என நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன் நடித்து, கடந்த 13-ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. இந்தப் படத்தில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சமுத்திரகனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
‘டாக்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானப் படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான சில வாரங்களிலேயே, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெற்ற நிலையில், 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய உதயநிதி, ‘டான்’ படத்தின் கதை முதலில் தனக்கு சொல்லப்பட்டதாகவும், ஆனால் பள்ளிக் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் மறுத்துவிட்டதாகக் கூறினார். விழாவின் நிறைவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘டான்’ படம் இவ்வளவு வெற்றி பெரும் என நினைக்கவில்லை என்று தெரிவித்தார். இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவிய படக்குழுவுக்கும், படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.