தமிழக அரசின் மதுபான கடையில், காவலாளியை துணியால் முகத்தை மூடி, நள்ளிரவு நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நேற்று நள்ளிரவு டாஸ்மார்க் கடை காவலாளியை துணியால் முகத்தை மூடி, அவரை அரிவாளால் வெட்டி, டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பல ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருபுவனம் அடுத்த கலியாந்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த அன்று, கடையை மூடிவிட்டு கடையின் மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
அப்போது கடையின் இரவு நேர காவலாளி தீர்த்தம் (65 வயது) என்பவர், கடை முன்பு படுத்திருந்தார். இரவு நேரத்தில் டெம்போ வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல், காவலாளி முகத்தை துணியால் மூடி, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
தொடர்ந்து மது கடையை உடைத்து, அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை தாங்கள் எடுத்து வந்த சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
பலத்த காயமடைந்த காவலாளி தீர்த்தத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருபுவனம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மர்ம கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.