புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 30ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சத்யேந்தரை கைது செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். டெல்லியில் இருக்கும் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நகைக்கடைகாரர் வீடுகள் என 7 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரின் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி பணம், 1.8 கிலோ எடை கொண்ட 133 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.