மதுரை: மதுரை நகரில் வைகை ஆறு குறுக்கே தடுப்பணை கட்டிய பிறகு தற்போதுதான் முதல் முறையாக சுத்தமான தண்ணீர் தேங்கி நிற்க தொடங்கியிருக்கிறது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அழகு பார்ப்போரை கொள்ளை கொள்ள வைத்திருப்பதால் குளிக்க வருவோர் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இப்பகுதி ‘திடீர்’ சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது.
தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறான வைகை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வருசநாடு, மேகமலை பகுதிகளில் உற்பத்தியாகி மதுரை வழியாக ராமநாதபுரம் சென்றடைந்து அங்கு கடலில் கலக்கிறது. கடந்த காலத்தில் இந்த ஆற்றின் குறுக்கே அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், ஆண்டு முழுவதுமே வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்பட்டது.
இந்த ஆற்றங்கரையோரத்தில் வழிநெடுக தென்னை, நெல், வாழை உள்ளிட்ட பல்வகை விவசாயம் செழிந்து நடந்து வந்தது. அதன்பின் வைகை கட்டியதும், ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு அணையில் தண்ணீர் திறந்துவிடும்போது மட்டுமே தற்போது வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படுகிறது.
இடைப்பட்ட மற்ற காலங்களில் வைகை ஆறு வறண்டுபோய் கிடக்கிறது. அதனால், வைகை ஆற்றை நம்பி நிலத்தடி நீர் மட்டம் காணப்பட்ட மதுரை மாவட்டத்தில் குடிநீருக்கே சிக்கல் ஏற்பட தொடங்கியிருக்கிறது.
அதனால், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் துணையுடன் பொதுப்பணித் துறையுடன் இணைந்து வைகை ஆற்றில் வழிநெடுக தடுப்பணைகளை கட்டி நீரோட்டம் வரும்போது அதனை தேக்கி வைத்து அப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து மதுரையில் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டியிருக்கிறது. இதில், ஏவி மேம்பாலம் அருகே உள்ள தடுப்பணைகளில் கடந்த 3 ஆண்டாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் சாக்கடை நீர்தான் தேங்கி நின்றது.
இந்நிலையில், சமீபத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அந்த தண்ணீர் தற்போது வைகை ஆறு தடுப்பணையில் கடல்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது சுத்தமான வைகை ஆறு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வைகை ஆறு குறுக்கே இந்த தடுப்பணையின் தோற்றத்தை ஏவி மேம்பாலத்தில் இருந்து பார்க்கும்போது ஆறு அழகு பார்ப்போரை கொள்கை கொள்ள வைக்கிறது.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரிவயவர்கள், தற்போது வைகை ஆறு தடுப்பணையில் தேங்கி தண்ணீரில் குளித்தும், நீச்சலடித்து உற்சாகமடைந்துள்னர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த தடுப்பணைகளில் குளிப்பதற்காக குவிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், தற்போது மதுரை வைகை ஆறு தடுப்பணை தற்போது திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.