முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடலில் புனித நீராடிய பின்னர், முருகப் பெருமானை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்னும் ஒருசில தினங்களில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திடவும், தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்திடவும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்துள்ளார். அப்போது தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த், கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தார். கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்தார். தங்கச் சங்கிலி கிடைக்காமல் போனதையடுத்து, மன வருத்தத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்யச் சென்ற நிலையில், கோயிலில் உள்ள காசி விஸ்வநாதன் என்கிற அர்ச்சகரிடம் தனது தங்கச் சங்கிலி கடலில் காணாமல் போனது பற்றிக் கூறினார்.
”உங்க தங்கச் செயின் எங்கேயும் போகாது. முருகன் மேல பாரத்தைப் போட்டுட்டு மனமுருக வேண்டுங்க கிடைச்சிடும்” எனச் சொன்னார். இதனையடுத்து, கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் 40 பேர், தொடர்ந்து 8 மணி நேரம் கடலில் மூழ்கிக் காணாமல் போன 10 பவுன் தங்கச்சங்கிலியை தேடினர். இந்த நிலையில், பார்த்திபன் என்னும் சிப்பி அரிக்கும் தொழிலாளியின் கையில் தங்கச் சங்கிலி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி யானது ஒப்படைக்கப்பட்டது.
இதனால், மன மகிழ்ச்சி அடைந்த அவர், தங்கச்சங்கிலியை தேடிக் கொடுத்த கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களை, ஆரத்தழுவி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தார்.
“கடல்ல செயின் காணாமல் போனதும் ரொம்ப மனம் நொந்துட்டேன். அர்ச்சகர் சொன்னது மாதிரியே எம் பெருமான் முருகனை மனமுருக வேண்டி, நெத்தியில விபூதியைப் பூசுனேன். 8 மணி நேரப் போராட்டத்துல ஒரு வழியா செயின் கிடைச்சிடுச்சு. ஓம் முருகா” எனச் சொன்னபடி கோயில் கோபுரம் நோக்கிக் கும்பிட்டார் ரஜினிகாந்த்.