திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதத்தில் ரூ.250 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அனுமதிக்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளாக தரிசன செய்ய முடியாத பக்தர்கள் தற்போது சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை விடுமுறையால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் தினமும் குறைந்தது 70,000 முதல் 80,000 பேர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 லட்சம் பக்தர்களும், மே மாதத்தில் 22 லட்சம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.127 கோடியும், மே மாதத்தில் ரூ.123 கோடியும் என மொத்தம் ரூ.250 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இது தவிர பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.