நசரத்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வில் மதிப்பெண் குறையும் பயத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை நசரத்பேட்டை நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில் தேர்வில் குறைவான மதிப்பெண் வரும் பயத்தில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அறைக்குள் சென்ற சதீஷ் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது, சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்தபோது சதீஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும். எனது படிப்பிற்காக மேற்கொண்டு செலவு செய்ய வேண்டாம் என்பதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.