Remarks on Prophet: Mumbra Police summon suspended BJP spokesperson Nupur Sharma: நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை அக்கட்சி இடைநீக்கம் செய்து, மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் கட்சியிலிருந்து நீக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ஜூன் 22ஆம் தேதி ஆஜராகுமாறு மும்ப்ரா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மே மாத இறுதியில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களுக்காக நூபுர் ஷர்மா கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புதுடெல்லி தொகுதியில் பா.ஜ.க நூபுர் ஷர்மாவை களமிறக்கியது. அந்த தேர்தலில் அவர் தோல்வியுற்றார்.
அதேசமயம், நபிகள் நாயகத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக டெல்லியில் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலை பா.ஜ.க.,வின் டெல்லி பிரிவு கட்சியிலிருந்து வெளியேற்றியது.
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மூன்று நாடுகள் தங்கள் நாட்டுக்கான இந்திய தூதர்களை வரவழைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நூபுர் ஷர்மா மற்றும் ஜிண்டால் ஆகியோரின் நபிகள் பற்றிய கருத்துகளுக்கு எதிராக, திங்களன்று இந்தியாவின் நெருங்கிய பங்காளிகளாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுடன், இஸ்லாமிய உலகில் இருந்து விமர்சனங்கள் அதிகரித்தன. சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஜோர்டான், லிபியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கத்தார், குவைத் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்திய தூதர்களை ஞாயிற்றுக்கிழமை வரவழைத்து, அந்த கருத்துகளை கண்டித்தது.
ஞாயிற்றுக்கிழமை, பா.ஜ.க பொதுச் செயலாளர் அருண் சிங் ஒரு அறிக்கையில் நூபுர் ஷர்மா மற்றும் ஜிண்டாலைக் குறிப்பிடாமல் கட்சி “அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்பதை வலியுறுத்த முயன்றார். மேலும், “எந்த மதத்தைச் சேர்ந்த எந்த மதப் பிரமுகர்களையும் இழிவுபடுத்துவதை பா.ஜ.க கடுமையாகக் கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை” என்றும் அருண் சிங் அறிக்கை கூறுகிறது.
பா.ஜ.க.,வின் மத்திய ஒழுங்குக் குழுவின் உறுப்பினர் செயலர் ஓம் பதக் நூபுர் ஷர்மாவிடம் கட்சி எடுத்த நடவடிக்கையை தெரிவித்து, ஒரு கடிதத்தில், “பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள், இது பாரதிய ஜனதா கட்சியின் அரசியலமைப்பு விதி 10 (ஏ) ஐ தெளிவாக மீறுகிறது. மேலும் விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள்/பணிகள் ஏதேனும் இருந்தால் அவற்றிலிருந்தும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”
இதையும் படியுங்கள்: பாதுகாப்புத்துறையில் ரூ.76,390 கோடி கொள்முதல்; இந்திய நிறுவனங்களிடம் வாங்க ஒப்புதல்
ஒழுங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து, நூபுர் ஷர்மா மன்னிப்புக் கேட்டு, “நிபந்தனையின்றி” தனது கருத்துக்களை திரும்பப் பெற்றார்.
நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள், “சப்கா சாத், சப்கா விகாஸ்” (அனைவரின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி) என்பதை தனது ஆட்சி மந்திரமாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைமைக்கு “அதிருப்தியும்” ஏமாற்றமும் அளித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.