ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமை தாளாமல் 3 சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பெண் நாட்டார் தெய்வங்களில் கதைகள் உண்டு. தமிழகத்திலும் ஏழு கன்னிமார்கள், நல்லதங்காள் கதைகள் உள்ளன. சமுதாயத்தில் ஏதோ ஒருவிதத்தில் கொடுமை தாங்க முடியாமல் கொல்லப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களையே பின்னாளில் தெய்வங்களாக மாற்றினார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இந்தக் கதைகளை கேட்டால் கண்ணீர் வரவழைக்கும். இன்றைக்கும் நம்மூர்களில் நல்லத்தங்காள் கதையை விடிய விடிய மக்கள் கூத்தில் பார்ப்பது. கொடுமை தாங்க முடியாமல் நல்லதங்கள் தன்னுடைய குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட அந்த கதை எல்லோரையும் உறைய வைக்கும். அப்படியான ஒரு துயர சம்பவம் தான் ராஜஸ்தானில் தற்போது நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலு, கமலேஷ், மம்தா மீனா. உடன்பிறந்த சகோதரிகளான இந்த மூவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே கணவர்மார் வீட்டில் 3 பெண்களும் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகத் தெரிகிறது. பலமுறை அவர்களை கணவர் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையைக் கொடுக்க முடியாமல் பெண்வீட்டார் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
இச்சூழலில் 3 பெண்களும் தங்கள் கிராமத்துக்கு வெளியே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். காலுவின் 4 வயது மகனையும், கைக்குழந்தையையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுள்ளனர். தற்கொலை செய்து கொண்டபோது கமலேஷ் மற்றும் மம்தா மீனா ஆகிய இருவரும் கர்ப்பமாக இருந்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சகோதரிகளில் ஒருவர் தனது குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில், ”நாங்கள் சாக விரும்பவில்லை என்றாலும் இந்த கொடுமையை அனுபவிப்பதற்கு பதில் சாவதே மேல். எங்கள் சாவுக்குக் காரணம் கணவர்களின் உறவினர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
பலியான பெண்களின் தந்தை சர்தார் மீனா இதுகுறித்து கூறுகையில், ”நான் ஒரு சாதாரண விவசாயி. எனக்கு மொத்தம் 6 மகள்கள். கஷ்டப்பட்டு அவர்களை படிக்கவைத்து திருமணம் செய்து வைத்தேன். மாப்பிள்ளை வீட்டார் எனது மகள்களை கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்” என்றார்.
இதனைத்தொடர்ந்து பலியான பெண்களின் தந்தை சர்தார் மீனா அளித்த புகாரின்பேரில், 3 பெண்களின் கணவர்கள், மாமியார், மைத்துனி ஆகியோரை வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 65 வயது மூதாட்டி சடலம்.. 4 சவரன் நகைக்காக நடந்த கொடூரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM