கடந்த காலங்களில் இரண்டு முறை நிலக்கரிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும், இந்த ஆண்டில் மே மாதத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சரிவர திட்டமிடாததே தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. மிகுந்த அசாதாரண சூழலால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின்நிலையத்தின் செயல்பாடுகளை சமீபத்தில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத்ஜோஷி ஆய்வு செய்தார். அப்போது “பிசினஸ்லைன்’’ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்று தொடர்ந்து கூறுகிறீர்கள். அதேசமயம் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படியெனில் உண்மை நிலவரம்தான் என்ன?
நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்று இப்போதும் கூறுகிறேன். நாட்டில் 11 நாள் முதல் 12 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி (அனல் மின் நிலையங்களுக்குத் தேவையானது) கையிருப்பில் உள்ளது. 3.36 கோடி டன் நிலக்கரி வெவ்வேறு இடங்களில் உள்ளது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள அனல் மின் நிலையங்களில் 25 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. 500 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள மின் நிலையங்களில் 15 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது.
தினசரி அடிப்படையில் அனைத்து மின்நிலையங்களுக்கும் நிலக்கரி இருப்பு பூர்த்தி செய்யப்படுகிறது. அசாதாரண சூழல் காரணமாகத்தான் பற்றாக்குறை ஏற்பட்டது. பொருளாதார நடவடிக்கைகள் வேகமடைந்ததன் விளைவாக மின்சாரத் தேவை அதிகரித்தது. அதேசமயம் எரிவாயுவை இறக்குமதி செய்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரியில் செயல்படும் அனல் மின் நிலையங்கள் எரிவாயு மற்றும் நிலக்கரி விலை உயர்வு காரணமாக உற்பத்தியை நிறுத்திவிட்டன. நிலக்கரி விலை ஒரு டன்னுக்கு 40 டாலரிலிருந்து 210 டாலர் வரை உயர்ந்துவிட்டது. பகுதியளவில் நிலக்கரி இறக்குமதி செய்து உற்பத்தி செய்த அனல்மின் நிலையங்கள் நிலக்கரி இறக்குமதியை நிறுத்திவிட்டு, உள்நாட்டிலேயே வாங்க ஆரம்பித்தன. கடந்த ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி அளவு 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு காரணமே எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டுதான். சுரங்கங்களில் மழை நீர் தேங்கினால் நிலக்கரியை வெட்டியெடுக்கமுடியாது. மேலும் மழைக்காலங்களில் நிலக்கரியை எடுத்துச் செல்வதும் கடினம்.
அடுத்து மூன்றாவது சுற்று பற்றாக்குறை ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய சூழல் உருவாகாது என்று உறுதியாக நம்பலாமா?
நிலக்கரி தட்டுப்பாடு இனி ஏற்படாது. கோல் இந்தியா நிறுவனம் தனது உற்பத்தித் திறனை இந்த ஆண்டு 78 கோடி டன்னாக உயர்த்தியுள்ளது. அனல் மின் நிலையங்களுடன் கூடிய சுரங்கங்களின் உற்பத்தி 8.9 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இவற்றின் உற்பத்தி 13 கோடி டன்னாக உயரும். ஒட்டுமொத்தமாக நிலக்கரி உற்பத்தி 10 கோடி டன் அதிகரிக்கும். பற்றாக்குறை 10 கோடி டன் கிடையாது.
எதிர்காலத்தில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாது என்கிறீர்களா?
நிச்சயமாக, எதிர்காலத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருக்காது என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.
நிலக்கரி இல்லாமல் நாட்டில் எதுவும் சாத்தியமில்லை என்கிறீர்கள். அதேசமயம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இந்த சூழலை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
நிலக்கரி இல்லாமல் வளர்ச்சி இலக்குகளை நம்மால் எட்ட முடியாது. எனவே நீண்டகாலத்திற்கு நமக்கு நிலக்கரி அவசியம்தான். பிரச்சினை என்னவெனில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நாம் நிலக்கரியை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் நமது திறமை உள்ளது. அதேபோல புவி வெப்ப அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் நமது பங்களிப்பும் முக்கியமானது. நாம் பயன்படுத்தும் நிலக்கரி சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. நிலக்கரி எரிவாயுவை பயன்படுத்துவது மற்றும் அதிக அளவில் மரங்களை நடுவதாகும்.
நிலக்கரி சாம்பலிலிருந்து நிலக்கரி எரிவாயு எடுக்க முடியும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை அளிப்பதன் மூலம் இதை செயல்படுத்த ஊக்குவிக்கிறோம். வெளிநாட்டு தொழில்நுட்பம் மூலம் நான்கு இடங்களில் சோதனை ரீதியில் இது செயல்படுத்த உள்ளோம்.
எதிர்காலத்தில் அனல் மின்உற்பத்தி லாபகரமானதாக இருக்காது என்று கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் உள்ளதா?
நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதி கிடைப்பதில் சிரமம் இல்லை. அதனால்தான் 47 சுரங்கங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளோம்.
சுரங்கங்களுக்கு நிதி அளிப்பதில் நிதி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. நார்வேயின் நிதியம் நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளதே?
நிலக்கரியை பயன்படுத்தப்போவதில்லை என முன்னர் கூறிய பல நாடுகள் இப்போது நிலக்கரியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால் நிதி கிடைப்பதில் சிரமம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் பிரச்சினை என்னவெனில் சூழல் பாதிப்பு ஏற்படாமல் நிலக்கரியை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் உள்ளது.