புதுடெல்லி: நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எனினும், அவர்களது பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பெரிய அளவில் மத மோதல் வெடித்தது.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டம் தெரிவித்திருந்தார். அவர் கூறும்போது, “இந்தியாவை தற்போது ஆட்சி செய்யும் கட்சி முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை நசுக்குகிறது. உலக நாடுகள் இதை கவனத்தில் கொண்டு இந்தியாவை கண்டிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நபிகள் நாயகம் தொடர்பாக இந்தியாவில் பாஜக நிர்வாகிகள் பேசியதை கண்டித்து பாகிஸ்தான் வெளியிட்ட கருத்துகளை கவனித்தோம். தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகளை மீறுபவர்கள், மற்றொரு நாட்டில் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் அபத்தம் யாராலும் எங்கும் நிகழ்த்தப்படவில்லை.
இந்தியாவைக் கண்டிக்கும் பாகிஸ்தான் முதலில் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான், தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பாகிஸ்தானால், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகினர் என்பதற்கு உலகமே சாட்சியாக உள்ளது.
ஆனால், இந்தியா, பாகிஸ்தானுக்கு நேர் எதிராக மாறுபட்டது. பாகிஸ்தானில் மதவெறியர்களைப் புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்து வருகிறது. எனவே, பாகிஸ்தான், தங்கள் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.