சென்னை : ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காக்க வேண்டும் என நாம் அனைவரும் உலக உணவுப் பாதுகாப்புத் தின நன்னாளில் உறுதி ஏற்போம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகெங்கிலும் உணவு மூலம் ஏற்படும் அபாயங்கள், பாதுகாப்பான உணவினை உட்கொள்ளுதல், ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் ஏழாம் நாள் உலக உணவுப் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.உணவுப் பாதுகாப்பு குறித்து திருவள்ளுவர் அவர்கள் கூறுகையில், “சுவைக்காக இல்லாமல், ஆரோக்கியத்துக்காக உணவை உண்டால் உடலுக்கு நோயும், உயிருக்குக் கேடும் வராது” என பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் முன்பே கூறினார். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் – வளர்த்தேனே’ என்கிறார் திருமூலர். உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன்மூலம் உயிரையும் வளர்த்தேன் என்பது இதன் பொருள். அதாவது, நம் உடலை நல்லபடியாக வளர்த்து பாதுகாத்தல் அவசியம் என்கிறார் திருமூலர். ஏனென்றால் அது இறைவன் வசிக்கும் இடம். “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்ற பழமொழி உடலோம்பலின் இன்றியமையாமையை விளக்குகிறது.உடலைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வைகறைத் துயிலெழுதல், நீண்ட தூரம் நடந்து சென்று தூய நீரில் குளித்தல், சத்து நிறைந்த எளிய உணவை நன்கு அரைத்து உண்ணுதல், உண்ணுங்கால் மன அமைதியோடு உணவை நன்கு அரைத்து உண்ணுதல், இடையிடையே நீர் பருகாமல் உண்ட பிறகே நீர் அருந்துதல், உழைத்த உறுப்புகள் மன நிம்மதி பெற அளவாக உறங்குதல் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும். இவைகளில் முக்கியமானதாக கருதப்படுவது சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு ஆகும்.இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பற்ற உணவு காரணமாக 600 மில்லியன் மக்கள் பலவகையான நோய்களால் பாதிக்கப்பட்டு தங்கள் உயிர்களை இழக்கின்றனர் என்றும், சுகாதாரமற்ற உணவு நுகர்வு காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடுபவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.உணவுப் பாதுகாப்பினை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சத்துணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார். இந்தச் சத்துணவுத் திட்டத்தில் புதுமையை புகுத்தியவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இது மட்டுமல்லாமல், ஆலயங்கள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும், திட்டம், விலையில்லா இலவச அரிசி வழங்கும் திட்டம், ரமலான் மாதத்தில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் பாதுகாப்பான உணவு வழங்கும் திட்டம் – என தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.உணவுப் பாதுகாப்பு இல்லை என்றால், கொடிய நோய்களும், தொற்று நோய்களும் நம்மை எளிதாகத் தாக்கக்கூடும். தொற்று நோயிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம். உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் அரசு, உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய மூவருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதை மனதில் நிலை நிறுத்தி, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காத்து, உள்ளத்தை வலிமை பெறச் செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உலக உணவுப் பாதுகாப்புத் தின நன்னாளில் உறுதி ஏற்போம். இந்த நன்னாளில், மனத் தூய்மையும், உடல் தூய்மையும் பெற்று, தேக ஆரோக்கியத்துடன் அனைவரும் நீண்டநாள் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.