மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக வந்துள்ள கொலை மிரட்டல் கடிதம் குறித்து மும்பை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சினிமா துறை மட்டுமின்றி, அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான், பாந்த்ரா பேருந்து நிலையம் பகுதியில் தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நடைபயிற்சியை முடித்துவிட்டு, அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பாதுகாவலரின் கைக்கு மர்ம கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘சலீம் கான், சல்மான் கான்… விரைவில் சித்து மூஸ்வாலா போல்…’ என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சலீம் கானிடம் அந்த கடித்தத்தை கொடுத்தார். அவர் மும்பை போலீசிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்தார்.இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ‘பாந்த்ரா பேருந்து நிலையம் அருகே மர்மமான கடிதம் கிடந்தது. அதனை சலீம் கானின் பாதுகாவலர் எடுத்துள்ளார். அதில், சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம். நடிகருக்கும், அவரது தந்தைக்கும் மிரட்டல் வந்ததை அடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றனர்.முன்னதாக கடந்த சில ஆண்டுக்கு முன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி லாரன்ஸ் விஷ்னோய், சல்மான் கானை ஜோத்பூரில் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தான். அதே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்தான், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டுக் கொன்றது. இந்த நிலையில் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு, சித்து மூஸ்வாலாவிற்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் மர்ம கடிதம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.