சேலம்: ”ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் கொடிய சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே, வாரம் ஒருமுறை பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு நடத்த வேண்டும்” என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சேலம் ரயில் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாமக சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சேலம் நீதிமன்றத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் ஜூலை 12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி கூறியது: ”எங்கள் மீது அவதூறாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கும். நியாயம் வெல்லும்.
அடுத்த வாரம் பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு மாணவச் செல்வங்கள் மிக முக்கியம். இந்நிலையில், வகுப்பறையில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் கொடிய சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே, வாரம் ஒருமுறை பள்ளி கூடங்களில் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு நடத்த வேண்டும். அதற்காக தனியாக பாடம் தயாரித்து நீதி போதனை தேர்வில் வெற்றி பெற்றால்தான் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்ற நிலையை அரசு அமல்படுத்த வேண்டும். இதனால், மாணவர்கள் மத்தியில் நல் ஒழுக்கம் ஏற்படும்.
தமிழகத்தில் பட்டதாரி பெண் ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்று அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருந்தத்தக்கது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் சூழ்நிலையில் உள்ளது. உபரி நீரை சேலம் மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதிகளுக்கு மேட்டூர் உபரி நீரை கொண்டு வரும் வகையில், அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரியை சுத்தம் செய்து நீர் நிரம்ப வழி வகை செய்தால், சேலம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. தருமபுரி மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக உள்ளதால், ஒகேனக்கல் காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.