திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய சம்பவம் தொடர்பாக அமீரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல மாதங்கள் சிறையில் இருந்த சொப்னா, சிவசங்கர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சொப்னா கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற எர்ணாகுளம் பொருளாதார நீதிமன்றத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று இரண்டாவது நாளாக அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு தான் சிவசங்கர் என்னுடன் முதன் முதலாக தொடர்பு கொண்டார். அப்போது நான் அமீரக அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை தொடர்பு கொண்ட சிவசங்கர், முதல்வர் துபாயில் இருக்கிறார். போகும்போது ஒரு முக்கியமான சூட்கேசை மறந்துவிட்டு சென்றார். அதை உடனடியாக கொடுத்து அனுப்பவேண்டும் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் துணை தூதரக அலுவலகத்திற்கு சிவசங்கர் ஒரு சூட்கேஸ் அனுப்பி வைத்தார். அதை தூதரகத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி மூலம் துபாய்க்கு கொடுத்து அனுப்பினேன். அனுப்புவதற்கு முன் தூதரக அலுவலகத்தில் உள்ள ஸ்கேன் எந்திரம் மூலம் பரிசோதித்தபாது அதில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது. மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள துணை தூதர் வீட்டில் இருந்து அடிக்கடி பிரியாணி பாத்திரங்கள் பினராய் விஜயன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. சிவசங்கர் ஏற்பாட்டில் தான் இவை அனுப்பப்பட்டன. ஆனால் அதில் பிரியாணி மட்டுமல்லாமல் தங்கம் உள்ளிட்ட உலோக பொருட்கள் மறைத்து வைத்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய விபரங்களை நீதிமன்றத்தில் கூறியுள்ளேன்’’ என்றார். இதனால், பினராய் விஜயன் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.