திருச்சி: திருச்சி சிவா எம்.பி நேற்று தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக நடத்தி, தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். இதனால், அவர் உள்ளூர் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது அரசியல் களம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியை மையப்படுத்தியே இருந்து வருகிறது. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தபோதிலும், உள்ளூரான திருச்சியில் பெரியளவில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்த சூழலில், இவரது 69-வது பிறந்த நாள் விழா திருச்சியில் நேற்று வழக்கத்துக்கு மாறாக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இவரது வீடு அமைந்துள்ள கன்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு செல்லும் சாலையில் வாழை மரங்கள், தோரணங்கள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. வாழ்த்து போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மண்டலக் குழு தலைவர் மதிவாணன், கவுன்சிலர் ரமேஷ் உட்பட ஏராளமான திமுகவினர் இவரது வீட்டுக்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். வீட்டுமுன் சாலையோரத்தில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதற்கருகே ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இதுதவிர இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் திருச்சி சிவாவின் பிறந்த நாளையொட்டி, கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் அறிவுமதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா, திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்ற இலக்கிய விழா நடத்தப்பட்டது.
இந்த திடீர் மாற்றம் குறித்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘இந்தாண்டு வழக்கத்தைவிட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும், பங்கேற்றவர்கள் அதிகளவிலும் இருந்ததற்கு திருச்சி சிவாவின் அரசியல் நடவடிக்கைகளில் சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணம். இவர் நாடறிந்த அரசியல்வாதியாக இருந்த போதிலும் திருச்சியின் கள நிலவரம், கட்சியின் உள் அரசியல் அறிந்து உள்ளூர் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
ஆனால் மாநகராட்சி தேர்தலின்போது, இவர் பரிந்துரைத்த ஒருவருக்கு கவுன்சிலர் சீட் வழங்க தலைமை அறிவுறுத்திய பிறகும்கூட, இங்குள்ள நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதனால் திருச்சியிலுள்ள சில நிர்வாகிகள் மீது திருச்சி சிவா வருத்தத்தில் இருந்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு திருச்சி சிவாவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உள்ளூரிலுள்ள கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள், ரோட்டரி சங்கக் கூட்டங்கள் என பல நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். திருச்சியிலுள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று சந்திக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இனி அவர், உள்ளூர் அரசியலிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதை உணர முடிகிறது’’ என்றனர்.
திருச்சியில் திமுகவினர் ஏற்கெனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி என 2 தரப்பாக இருக்கும் நிலையில், மகன் சூர்யா பாஜகவில் இணைந்துள்ள சூழலில் திருச்சி சிவாவின் உள்ளூர் அரசியல் நடவடிக்கைகளை உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.