லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சி தாக்கல் செய்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி தன் இல்லத்தில் அடிக்கடி விருந்து கொடுத்தது சர்ச்சையானது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எனினும், எதிர்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் சார்ந்துள்ள பழமைவாத எம்.பி.,க்கள் பலர், கட்சித் தலைமையில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வலியுறுத்தினர்.
அத்துடன் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கட்சியின் உயர் மட்டக் குழுவிடம் அளித்தனர்.பழமைவாத கட்சிக்கு, 359 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில், 54 பேருக்கு அதிகமானோர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதால் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, தேர்தல் பொறுப்பாளர் கிரஹாம் பிராடி தெரிவித்தார்.இதையடுத்து நேற்று போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஓட்டுகள் விழுந்தன. ஆனால் நேற்று நள்ளிரவு வரை இறுதி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.
Advertisement