மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க பலனை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“புற்றுநோய் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது” என்று அமெரிக்காவின் நியூயார்க்-கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மைய்யத்தைச் சேர்ந்த டாக்டர் லுயிஸ் ஏ. டயஸ் கூறியுள்ளார்.
கீமோதெரபி, ரேடியேஷன் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றால் மலம், சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு துன்பங்களை புற்றுநோயாளிகள் சந்தித்து வந்தனர்.
இதுபோல் இன்னலை சந்தித்து வந்த 18 நோயாளிகளுக்கு மூன்று வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து ஆறு மாதங்கள் டோஸ்டார்லிமப் என்ற மருந்தை கொடுத்து பரிசோதித்தனர்.
இதில் இந்த மருந்தை உட்கொண்ட 18 நோயாளிகளுக்கும் புற்றுநோயின் அறிகுறியே இல்லாமல் பூரண குணமடைந்துள்ளதாக டாக்டர் லுயிஸ் டயஸ் தெரிவித்துள்ளார்.
எண்டோஸ்கோபி, பி.இ.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் இவர்கள் உடல்நிலை முழுவதுமாக தேறியிருந்ததாக கூறியுள்ளனர்.
டோஸ்டார்லிமப் என்ற இந்த மருந்து தற்போது மருத்துவ ஆய்வகங்களில் நோயெதிர்ப்பு மாற்று மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சிறு எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய்க்கு இந்த மருந்து எந்தளவுக்கு தீர்வாக இருக்கும் என்பதை வரையறுக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே கட்டத்தில் இருந்த இந்த 18 நோயாளிகளும் பூரண குணமடைந்திருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர் டாக்டர் அலன் பி வெனூக் கூறுகையில், பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட புற்றுநோயாளிகள் அனைவரும் குணமடைந்திருப்பது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.