சென்னை: ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் கடலூர் மாவட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, குழந்தைகளின் பாலின விகிதத்தில் தேசிய சராசரியைவிடக் குறைவாக இருந்த அரியலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி, சென்னை ஆகிய 10 மாவட்டங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த மாவட்டங்களில் பாலின பாகுபாடு அடிப்படையில், பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுப்பது, பெண் குழந்தை உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பை, கல்வியை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி
இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தை மத்திய அரசு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்பு இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.50 லட்சம் மத்திய அரசு நிதி வழங்கி வந்தது.
தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.30 லட்சம் வழங்க உள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.