'மதவெறியை ஊக்குவிக்காதீர்கள்' – இந்தியாவுக்கு தலிபான் அரசு அறிவுரை

“மதவெறியை ஊக்குவித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்” என இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவுரை கூறியுள்ளது.

கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் நடந்த போராட்டம் வன்முறையானது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நூபுர் சர்மாவின் பேச்சுக்கு ஜிசிசி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, யுஏஇ, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், ஜோர்டான், லிபியா என 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சர்ச்சையை ஒட்டி ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண் கல்விக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் வரக் கூடாது. அப்படியே வெளியே வந்தாலும் முழுவதுமாக உடலை மறைக்கும் நீல நிற புர்கா அணிந்தே வர வேண்டும். ஆண்கள் தாடியை சவரம் செய்யக் கூடாது. சினிமா, கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அடுக்கடுக்காக கெடுபிடிகளை விதித்துள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா மதவெறியை ஊக்குவிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் உக்ரைன், ரஷ்யா போரை கண்டித்தும் தலிபான் கருத்து தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இன்னும் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.