மதுரையில் 12 ஆம் பொதுத் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மனவருத்தத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாநகர் சோலை அழகுபுரம் 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன் – மாரிஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ள நிலையில், அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த மூத்த மகன் பிரவின் கார்த்திக் பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில், தேர்வு முடிவடைந்த நாள் முதல் மிகுந்த கவலையுடன் பிரவின் கார்த்திக் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த மாணவனின் தந்தை மாணவனை ஆட்டோவில் தூக்கிச் சென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மாணவனின் தற்கொலை குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுத் தேர்வினை சரியாக எழுதாத காரணத்தினால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM