கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரை ராம்பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் 54 வயதான ராமசிகாபதி என்ற தொழிலதிபர். இவரது மகள் ராமசிவானி, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு, கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ராமசிவானி திங்கட்கிழமை வழக்கம்போல மதியம் வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது கார் மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி, ராமசிவானி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமசிவானி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவறிந்து வந்த மதுக்கரை போலீசார், காரில் இருந்த ராமசிவானி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தில்லையரசன் (44) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 22 வயதான ஆனநிலையில், பயிற்சி மருத்துவர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM