வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், 2022 ஜூன் 8 முதல் 9 வரை இருதரப்புப் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ளார். தனது விஜயத்தின் போது, அமைச்சர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும், நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங், சட்டம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. சண்முகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.
விஜயத்தைத் தொடர்ந்து, அமைச்சர் பீரிஸ் 2022 ஜூன் 10 முதல் 11 வரை 19வது ஐ.ஐ.எஸ்.எஸ். ஷங்ரி-லா உரையாடல்: ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அமைச்சர் இலங்கை ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஐ.ஐ.எஸ்.எஸ். ஷங்ரி-லா உரையாடல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் சவால்கள் பற்றிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும். அமைச்சர் பீரிஸ் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
ஷங்ரிலா உரையாடலின் பக்கவாட்டில், ஒருபுறம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜப்பான் பிரதமர், கத்தார் அரசின் துணைப் பிரதமர், பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர், இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலாளர், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இந்த இருதரப்பு சந்திப்புக்கள், இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்குவதற்கும், தற்போதைய பொருளாதார மீட்சி மற்றும் நாட்டின் எதிர்கால தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சருக்கு வாய்ப்பளிக்கும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 07