மும்பை: மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் 22 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுயேச்சைகளின் ஆதரவுடன் கூடுதலாக ஓரிடத்தை பெறுவதற்கு பாஜகவும், சிவசேனாவும் தீவிர போட்டியில் இறங்கியுள்ளன.
மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 100 ஆக உள்ளது. மாநிலங்களவையில் இப்போது பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 1990-ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதன் பிறகு தற்போது தான் பாஜக 100 இடங்களை தொட்ட கட்சியாக உள்ளது.
இந்தநிலையில் ஜூன் 10-ம் தேதி மீண்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 24 இடங்கள் பாஜக வசம் உள்ளன. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற 100 என்ற சாதனை பறிபோகும் சூழல் உள்ளது.
இதனால் அதிகமான இடங்களை பிடிக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்யும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்படி பல மாநிலங்களில் தங்களுக்கு இருக்கும் ஆதரவையும் விட கூடுதலான வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் வழக்கமாக மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு மொத்தம் 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 55, என்சிபிக்கு 54, காங்கிரசுக்கு 42 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இது தவிர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டு வேட்பாளர்களை வென்ற பிறகு மீதம் 29 எம்எல்ஏக்கள் மீதமிருப்பர். எனவே 3-வது இடத்தை சிறிய கட்சிகளின் ஆதரவுடன் வெல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.
இதுபோலவே மீதமுள்ள 27 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலா ஒரு எம்.பி.க்கள் பெற்ற பிறகு அந்த கூட்டணியில் 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அந்த அணியும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் 4-வது இடத்தை வெல்ல திட்டமிட்டு வருகிறது.
பகுஜன் விகாஸ் அகாடிக்கு 3 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிரஹர் ஜனசக்தி கட்சிக்கு தலா 2 பேரும், சிபிஐ(எம்), ஷேத்காரி கம்கர் பக்ஷா, ஸ்வாபிமானி பக்ஷா, கிராந்திகாரி ஷேத்காரி கட்சி, ஜன்சுராஜ்ய சக்தி, ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா ஆகியோருக்கு தலா 1 எம்எல்ஏக்களும் உள்ளனர். இது தவிர 13 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.
2019- இல் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நான்கு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்தனர். அந்த எம்எல்ஏக்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களது குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என சில எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர்.
இருப்பினும் சில எம்எல்ஏக்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து நோட்டீஸ் அனுப்பி மிரட்டும் உத்தியை பாஜக கையாள்வதாக காங்கிரஸ் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.
ஆளும் கூட்டணியின் தலைவர்கள் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசி தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்று, போட்டியின்றித் தேர்தலை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பாஜக இதற்கு உடன்படவில்லை.