இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தன் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்ய ராதிகா மெர்ச்சன்ட் என்பவரைத் தேர்வு செய்திருக்கிறார். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து அவர்களுக்கு 2019-ம் ஆண்டே ரகசியமாக நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ராதிகா மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் விரன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சண்ட் தம்பதிகளின் மகள். அமெரிக்காவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். ராதிகா மெர்ச்சன்ட் தற்போது தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ராதிகா பரத நாட்டியத்தின்மீது தீராத ஆர்வம் கொண்டவர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்து வந்தார். தற்போது பயிற்சி முடிந்துள்ள நிலையில் ராதிகாவின் அரங்கேற்றத்தை நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள தனது ஜியோ வேல்டு சென்டரில் இந்த அரங்கேற்றத்தை முகேஷ் அம்பானி நடத்தி முடித்திருக்கிறார்.
ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானியும் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இந்த அரங்கேற்றத்தில் நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அமீர் கான் உட்பட் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அம்பானி மற்றும் விரன் மெர்ச்சன்ட் குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இரண்டு மகன்கள் தங்களின் தாயாரோடு கலந்து கொண்டனர். ராதிகாவின் அரங்கேற்றத்தில் முகேஷ் அம்பானி தன் பேரன் உட்பட குடும்பத்தோடு கலந்து கொண்டார். முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா பென்னும் இந்த அரங்கேற்றத்தில் பங்கேற்று தன் பேரனின் வருங்கால மனைவியை உற்சாகப்படுத்தினார். ராதிகா தனது அரங்கேற்றத்தில் தனது குரு மற்றும் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கணபதி வந்தனம் செய்து தனது வழக்கமான பரதநாட்டியத்தை தொடர்ந்தார். பரதநாட்டியம் கற்றுக்கொள்பவர்களுக்கு அரங்கேற்றம் மிகவும் முக்கியமானது. அரங்கேற்றம் முடிந்தால் மட்டுமே மேடை நிகழ்ச்சிகள் மற்றும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். ராதிகா மெர்ச்சன்ட் அம்பானி வீட்டு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த அம்பானி சில சிகிச்சை முறைகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்திருக்கிறார். அவருக்கு நிர்வாக ரீதயாக சில பெறுப்புகளை வழங்கிய பிறகு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடக்கும் என்கின்றனர்.