கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாப்புலர் ஃபிரெண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினரை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பாப்புலர் பிஎஃப்ஐ அமைப்பு சார்பில் அண்மையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது சில சிறுவர்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இது, கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத வெறுப்பை தூண்டும் விதமாக பேரணி நடத்தியதாக கூறி பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகள் 25 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கேரள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தை நோக்கி நேற்று பேரணி சென்றனர். போலீஸாரின் தடுப்புகளை மீறி சென்ற அவர்கள், ஒருகட்டத்தில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முதல்வரின் இல்லத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM