துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார்.
அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது.இதைப்பயன்படுத்தி, அரசு அதிகாரங்களில் தலையிடுவது, பதவிகளை நிரப்ப லஞ்சம் பெறுவது உள்ளிட்ட செயல்களில் குப்தா சகோதரர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்களின் செயல்களை அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா கண்டுக் கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. இத்துடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, ௨௦௧௮ல் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து, தென்னாப்ரிக்காவில் தங்களுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, குப்தா சகோதரர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றனர்.
அவர்கள் துபாயில் இருப்பதை அறிந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துவர அந்நாட்டு போலீசார் முயன்றனர். இது தொடர்பாக சர்வதேச போலீசான, ‘இன்டர்போல்’ குப்தா சகோதரர்களுக்கு எதிராக ‘ரெட்கார்னர் நோட்டீஸ்’ வெளியிட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் இடையே, கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொப்பமான நிலையில், குப்தா சகோதரர்களை ஒப்படைக்க, தென்னாப்ரிக்க அரசு கோரிக்கை விடுத்தது.இந்நிலையில் ராஜேஷ் குப்தா,அதுல் குப்தா ஆகியோரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். அஜய் குப்தா பற்றிய விபரம் தெரியவில்லை. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் அதுலை தென்னாப்ரிக்காவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘இதற்கு தேவையான
ஒத்துழைப்பை எமிரேட்ஸ் அரசு அளிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement