ரஷ்யாவின் பெரிய ஒரு டாங்கிகள் அணிவகுப்பை தமது ட்ரோன் விமானத்தால் கண்டறிந்து, அதை மொத்தமாக அழிக்க உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு உதவிய 15 வயது சிறுவனை தற்போது ஹீரோவாக நாடே கொண்டாடுகிறது.
உக்ரைன் மீதான போர் தொடங்கிய தொடக்க நாட்களில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி, தலைநகர் கீவ் நோக்கி நகர்ந்த அந்த அணிவகுப்பை தகுந்த நேரத்தில் கண்டறிந்து அழிக்காமல் விட்டிருந்தால், அதனால் உக்ரைன் பெரும் விலை அளித்திருக்கும் என்றே நம்பப்படுகிறது.
Andrii Pokrasa என்ற 15 வயது சிறுவனை உக்ரைன் இராணுவம் நேரிடையாக சென்று உதவி கோரியுள்ளது.
கீவ் புறநகர் பகுதியில் குடியிருக்கும் குறித்த சிறுவனிடம் ட்ரோன் விமானம் ஒன்று இருந்தது.
ரஷ்யாவின் டாங்கிகள் அணிவகுப்பு தொடர்பில் ரகசிய தகவல் கிடைத்த நிலையிலேயே உக்ரைன் ராணுவம் குறித்த சிறுவனிடம் உதவி கோரியிருந்தது.
கடந்த ஆண்டு Andrii Pokrasa ட்ரோன் விமானம் ஒன்றை வாங்கிய நிலையில், மிகவும் திறமையான விமானியாகவும் ஆனார்.
இந்த நிலையில், உக்ரைன் இராணுவத்தின் கோரிக்கையை ஏற்று களமிறங்கிய Andrii Pokrasa, இரவு நேரம் தமது ட்ரோனை பயன்படுத்தி, ரஷ்ய டாங்கிகள் அணிவகுப்பின் புகைப்படங்களை பதிவு செய்தார்.
தொடர்ந்து அந்த புகைப்படங்களை உக்ரைன் இராணுவத்திற்கு கைமாறினார். அடுத்த சில நிமிடங்களில் உக்ரைன் இராணுவம் ரஷ்ய டாங்கிகள் அணிவகுப்பின் மீது உக்கிரமாக தாக்குதல் தொடுத்து மொத்த டாங்கிகளையும் அழித்துள்ளது.
இச்சம்பவம் வெற்றியில் முடிய, குறித்த சிறுவனுக்கு இராணுவம் பயன்படுத்தும் ட்ரோன்களை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளது உக்ரைன்.
தொடர்ந்து சிறுவன் உதவியுடன் ரஷ்ய டாங்கிகளை மொத்தமாக சிதறடித்துள்ளது உக்ரைன் இராணுவம்.
அந்த பிராந்தியத்திலேயே Andrii Pokrasa மட்டுமே ட்ரோன் விமானங்களை திறம்பட இயக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்தார் எனவும், அவரது உதவியை நாடியதில் உக்ரைன் பெருமை கொள்கிறது எனவும், உண்மையில் Andrii Pokrasa ஒரு ஹீரோ எனவும் உக்ரைன் நாட்டின் ஹீரோ எனவும் இராணுவ அதிகாரிகள் தரப்பு சிறுவனை கொண்டாடியுள்ளது.