காசிக்கு நிகராக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் போற்றப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகைபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான மக்கள் புனிதநீராடிக்கொண்டிருந்தனர். அப்போது கடலில் சற்று தூரமாக ஆண் மற்றும் பெண் இருவரும் ஒன்றாக இறந்தநிலையில் மிதந்துவருவதை பார்த்தனர். இதையடுத்த ராமேஸ்வரம் கடலோர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீஸார் ஃபைபர் படகு மூலம் இருவரது உடலையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
அப்போது துப்பாட்டாவால் இடுப்பில் இருவரும் சேர்த்து கட்டியிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இறந்த ஆணின் உடலை போலீஸார் சோதனை செய்தபோது அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றினர். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இந்த முகவரியை வைத்து கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர்கள் விசாரணை நடத்தியதில் இறந்தவர்களின் உருக்கமான பின்னணி தெரியவந்ததாக ராமேஸ்வரம் கடலோர போலீஸார் கூறினர்.
தொடர்ந்து நாம் போலீஸாரிடம் பேசியபோது, இறந்த கோவிந்தராஜன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சிதுறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தனலட்சுமி, இவர் சர்வோதையா சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு பிரபாகரன்(22) என்ற ஒரே மகன் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென அவர்களது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே மகன் என்பதால் அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த கோவிந்தராஜ், தனலெட்சுமி தம்பதி, எங்கள் மகன் இன்றி வாழமுடியாது, நாங்கள் எங்காவது சென்று இறந்துவிடுகிறோம் என உறவினர்களிடம் அடிக்கடி கூறிவந்துள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றிவந்துள்ளனர். இருந்தும் மகன் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் கடந்த 3-ம் தேதி யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் வீட்டைவிட்டு வெளியேசென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாகியும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். இருவரும் செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பொள்ளாச்சி அருகே கோட்டூர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தற்போது நாம் அளித்த தகவல்படி இறந்தது வீட்டைவிட்டு வந்த கோவிந்தராஜ், தனலெட்சுமி தம்பதி என தெரியவந்தது. இதனையடுத்து கோட்டூர் போலீஸார் அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், “நாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்து ஒரே மகனை இழந்துவிட்டோம். அவனுக்கு கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்த்தோம். நாங்கள் மொத்த பாசத்தையும் அவன் மீது வைத்திருந்தோம். ஆனால் எங்களை அனாதையாக விட்டு போய்விட்டான். எங்கள் மகன் இல்லா வாழ்க்கையை வாழ பிடிக்கவில்லை. எங்களின் மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சொத்துக்களை சேர்த்து வைத்தோம். அந்த சொத்துக்களை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. அதனால் எங்கள் மகன் கனீஸ்பிரபாகரன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதற்கு கோவையை சேர்ந்த நான்கு பேரை நியமித்துள்ளோம்” என குறிப்பிட்டிருந்தாக கோட்டூர் போலீசார் தெரிவித்ததாக ராமேஸ்வரம் போலீஸார் தெரிவித்தனர்.
இவர்கள் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர்.
மகன் இறந்த துக்கம் தாளாமல் கணவன், மனைவி ஒன்றாக கடலில் உயிரை மாய்த்துக்கொண்டது ராமேஸ்வரம் வந்த பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியது.