புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரூ.76,390 கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சுயசார்பு கொள்கையின்படி (ஆத்ம நிர்பார் பாரத்) முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவத்துக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை வாங்க ஆய்வு செய்யப்பட்டது.
மலைப் பகுதிகளிலும் செயல்படும் போர்க் லிப்ட், பாலம் கட்டும் டேங்குகள், சக்கரங்கள் கொண்ட போர்க்கருவி வாகனங்கள், பீரங்கி அழிப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை கண்டறியும் ரேடார்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவை அனைத்தும் இந்திய ராணுவத்துக்கென பிரத்யேகமாக உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் தயாரிக்கப்பட்டவை.
பாதுகாப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி யாக, டிஜிட்டல் கடலோர காவல் திட்டம் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தேவையானவற்றை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வது, போக்குவரத்து மற்றும் நிதி தேவைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.