புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட 5 ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் அலிகன்ச் பகுதியிலுள்ளது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அலுவலகம். பாஜகவின் தாய் அமைப்பான இதன் தீவிரத் தொண்டரான இருப்பவர் முனைவர். நீல்காந்த் மணி பூஜாரி. இவர் அருகிலுள்ள சுல்தான்பூரின் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
நீல்காந்த் கைப்பேசியின் வாட்ஸ்அப்பிற்கு நேற்று முன்பின் தெரியாத நபரால் ஒரு தகவல் பகிரப்பட்டிருந்தது. இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இடம்பெற்றதில் ஒரு மிரட்டல் செய்தி இடம்பெற்றிருந்தது. இதன் மீது முனைவர் நீர்காந்த், லக்னோவின் மதியாவ் காவல்நிலையத்தில் உடனடியாகப் புகார் செய்துள்ளார்
இப்புகாரை பதிவு செய்த காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணயில் இறங்கினர். இதில், வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் தகவல், தமிழகத்தின் புதுக்கோட்டையிலுள்ள திருக்கோணம் வாசியான ராஜ் முகம்மது என்பவரால் அனுப்பப்பட்டது தெரிந்தது.
இந்த வாட்ஸ்அப்பின் தகவலின்படி, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, உன்னாவ் மற்றும் கர்நாடகாவின் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை (மொத்தம் 5 இடங்கள்) வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், தமிழக போலீஸாரை தொடர்புகொண்டு முகவரியை உத்தரப் பிரதேசத்தின் எஸ்ஐடி சிறப்பு படை உறுதி செய்தது. இதையடுத்து, லக்னோவிலிருந்து விமானத்தில் கிளம்பி வந்த எஸ்ஐடி படை, ராஜ் முகம்மதை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படும் இவர், லக்னோவிற்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட உள்ளார்.
இந்த வழக்கில், உத்தரப் பிரதேச ஏடிஎஸ் படையுடன் இணைந்து கர்நாடகா போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.