காசியாபாத்: வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, சங்கத் மோச்சல் கோயில் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட வலியுல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு காசியாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தம் 121 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிதேந்திர குமார் சின்ஹா, கொலை, கொலை முயற்சி மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் வலியுல்லா கான் குற்றவாளி என கடந்த 4ம் தேதி அறிவித்தார். இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், வலியுல்லா கானுக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.