லக்னோ : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 2006ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி வாலியுல்லா கானுக்கு துாக்கு தண்டனை விதித்து காஜியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டதுஉ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சா கோவிலில் கடந்த 2006, மார்ச் 7ல் குண்டு வெடித்தது.
15 நிமிடங்களுக்கு பின் வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 20 பேர் பலியாகினர்; 100 பேர் காயம் அடைந்தனர். வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் – உல் – ஜிகாத் அல் இஸ்லாமி என்ற பயங்கரவாத குழுவைச் சேர்ந்த வாலியுல்லா கான், இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.வாராணாசியில் உள்ள வழக்கறிஞர்கள் வாதாட மறுத்ததை அடுத்து, வழக்கு காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.வாலியுல்லா கான் மீதான இரண்டு வழக்குகளில் நீதிபதி ஜிதேந்திர குமார் தீர்ப்பளித்தார்.ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் துாக்கு தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
Advertisement