பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக், யஷ்வந்த்புரம் ஆகிய இரு ரயில் முனையங்களில் தினமும் அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுவதால் இடப்பற்றாக்குறையும், காலதாமதமும் ஏற்படுகிறது.
இதனால் கடந்த 2015-ம் ஆண்டு பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள பையப்பனஹள்ளியில் 3-வது ரயில் முனையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
ரூ.314 கோடி செலவில் சர்வதேச விமான நிலைய தரத்தில் நாட்டிலேயே முதல் முறையாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட (ஏசி வசதி கொண்ட) ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 4,200 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தின் அனைத்து பணிகளும் கடந்த 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து 2021-ம் ஆண்டு மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமரின் தேதி கிடைக்காததால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 6 முதல் இந்த ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து நேற்று மாலை 7 மணிக்கு பெங்களூரு பானஸ்வாடியில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலை தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி விஜயா கூறும்போது ‘‘இந்த ரயில் முனையத்துக்கு பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் தரத்திலான இந்த ரயில் முனையத்தில் 8 நடைமேடைகள், 1 மேம்பாலம், 2 சுரங்கப்பாதைகள், 22 மின்னேற்றிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில வரலாறையும் பண்பாட்டையும் விவரிக்கும் கலைக்கூடம், உயர்தர உணவகம், 800 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் முனையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்கப்படும். இதனால் தமிழக பயணிகள் அதிகளவில் பயனடைவார்கள்” என்றார்.