ஹைதராபாத்: ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக வெயில் தகித்து வந்த நிலையில், மாநிலத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. ராய்லிசீமா மாவட்டத்தில் கடும் மழை திடீரென்று கொட்டித் தீர்த்தது. கர்னூர் மாவட்டத்தில் ஹாலஹார்னி மண்டல் பகுதியில் சில மணி நேரத்தில் 4 செ.மீ. அளவுக்கு கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதேபோல நெல்லூர், காமாலி பகுதிகளில் விசாகப்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் பெருமழை பெய்தது. கனமழையின் போது மின்னல் தாக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். தொடர்ந்து, 10 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கும் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனிடையே கர்னூல் மாவட்டம் காலரு சிப்புகரி இடையே கல்லூர் வாகு நீரோடையில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவர் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். பெங்களூருவில் இருந்து அதோரி வழியாக குல்கர்காவிற்கு ஷாகித் அன்சாரி என்ற மருத்துவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்லூர் வாகு நீரோடை அருகே சென்ற கார் திடீரென்று எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விடிய, விடிய தொடர்ந்து தேடலில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.