எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்ட தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 புராதான உலோக மற்றும் கற்சிலைகள் இன்று கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சிலைகளை மே 8-ம் தேதி வரை பாதுகாப்பு மையத்தில் வைக்க கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டு மியூசியங்களில் வைக்கப்பட்டிருந்த உலோக மற்றும் புராதான கற்சிலைகள் மீட்கப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த சிலைகளை இந்து சமய அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கும் பொருட்டு இன்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன்.
இந்த சிலைகள் அனைத்தும் திருச்சி, அரியலூர் , நாகப்பட்டினம், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கோயில்களுக்கு சொந்தமானவை.
இதைத் தொடர்ந்து அந்தந்த சிலைகளுக்கு உரிய கோயில்களின் நிர்வாக அலுவலர்கள் அச் சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு தரவேண்டுமென தனித்தனியாக மனு அளித்திருந்தனர்.
அம் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரும் 8-ம் தேதிக்கு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அதுவரை நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“