ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் அவினாஷ் புதிய தேசிய சாதனை

ரபாட்,

டயமண்ட் லீக் தடகள போட்டி மொராக்கோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் மராட்டியத்தை சேர்ந்த 27 வயது ராணுவ வீரரான அவினாஷ் சாபேல் 8 நிமிடம் 12.48 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 5-வது இடத்தை பிடித்தார்.

அத்துடன் அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய தேசிய சாதனை படைத்தார். கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட்பிரி போட்டியில் அவினாஷ் சாபேல் 8 நிமிடம் 16.21 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய தேசிய சாதனையாக இருந்தது.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் 2018-ம் ஆண்டு முதல்முறையாக தேசிய சாதனையை படைத்த அவினாஷ் தனது சொந்த சாதனையை 8-வது முறையாக முறியடித்து இருக்கிறார்.

மொராக்கோ டயமண்ட் லீக்கில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான சோபியான் எல் பகாலி (மொராக்கோ) 7 நிமிடம் 58.28 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியவரான லாமிசா ஜிர்மா (எத்தியோப்பியா) 2-வது இடத்தையும், மற்றொரு எத்தியோப்பியா வீரர் ஹாய்ல்மரியம் 3-வது இடத்தையும் பிடித்தனர். ரியோ ஒலிம்பிக் சாம்பியனான கோன்சிலியஸ் கிருடோ (கென்யா) 4-வது இடத்தை பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.