வாஷிங்டன்: தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மீது இன்றளவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் அவ்வாறாக செய்யவில்லை என்று அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு ஒன்று சொல்லியுள்ளது.
தி ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஃபார் ஆப்கானிஸ்தான் ரீகன்ஸ்ட்ரக்ஷன் The Special Inspector General for Afghanistan Reconstruction (SIGAR) தனது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 2021 அன்று அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினர். அவருடன் இன்னும் சிலரும் சென்றனர். அப்போது ஹெலிகாப்டரில் பணம் கொண்டு செல்லப்பட்டது உண்மையே. ஆனால் அதன் அளவு 1 மில்லியன் டாலர். இதற்காக அன்று நிகழ்விடத்தில் இருந்த அதிகாரிகள், வீரர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
பரலாகக் கூறப்படுவதுபோல் 169 மில்லியன் டாலர் பணத்தை எடுத்துச் சென்றால். அது மட்டுமே ஹெலிகாப்டரில் 7.5 அடி நீளத்துக்கு, 3 அடி அகலத்துக்கு, 3 அடி உயரத்துக்கு அடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் எடை 3,722 பவுண்டுகளாக இருந்திருக்கும். அதாவது கிட்டத்தட்ட 2 டன். ஆனால் அஷ்ரப் கனி சென்ற ஹெலிகாப்டர் கார்கோ வசதியற்றது.
ஆனால் ஹெலிகாப்டரில் இருந்த சில அதிகாரிகளில் ஒருவர் 2லட்சம் டாலர், ஒருவர் 2.40 லட்சம் டாலர், 5,000 டாலர், 10 ஆயிரம் டாலர் என்ற தங்களின் கைப்பைகள், பாக்கெட்டுகளில் எடுத்துச் சென்றுள்ளனர் என்று சாட்சிகள் கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால் மொத்தம் 5 லட்சம் டாலர் எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதியாகவில்லை. ஆனால், இவற்றை அதிபர் பாதுகாப்பு அதிகாரிகளே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறிய நேட்டோ, அமெரிக்கா: 2021 ஆகஸ்ட் உலக அரசியலில் இயல்பானதாக இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இந்நிலையில் காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதை உறுதி செய்த அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளிேயறி வெளிநாட்டில் தஞ்சமடைந்தார்.
தப்பியோடியது மட்டுமல்லாமல் அதிபர் அஷ்ரப் கனி வெளியேறும் போது 4 கார்கள் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தளம் தெரிவித்தது.
நான் அப்படிச் செய்யவில்லை: அதன்பின் அஷ்ரப் கானி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது. நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னமாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை.
நான் 4 சூட்கேஸ் நிறைய டாலர்கள் அதாவது அரசின் 16.90 கோடி அமெரிக்க டாலர்களுடன் நான் ஹெலிகாப்டரில் தப்பித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல்.
நான் தஜிகிஸ்தானில் இல்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், என்னுடைய குணத்தையும் அழிப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவது தொடர்பாக பேச்சு நடத்திவருகிறேன் விரைவில் நாடு திரும்புவேன். ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால்தான், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்” எனத் தெரிவித்திருந்தார்.