ஹைதராபாத்: 17 வயது ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ மகன் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அசாதுதீன் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி எம்எல்ஏ மகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட, ஆறு பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு பேரில் ஒருவர் AIMIM கட்சியின் எம்எல்ஏ மகனும் ஒருவர். அவர் மைனர் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் கூறுகையில், “பார்ட்டி ஐடியாவை பெங்களூருவைச் சேர்ந்த சிறுவன் தான் அளித்துள்ளார். அதன்படி, உஸ்மான் அலி கான் என்பவர், பப்பிற்கு முன்பதிவு செய்ய, பாதிக்கப்பட்ட பெண் மே 28-ஆம் தேதி ரூ.1,300 செலுத்தி, தனது நண்பர்களுடன் பப்பிற்கு வந்துள்ளார். பப்பிற்குள் இருந்தே சதித் திட்டத்தை இவர்கள் தீட்டியுள்ளனர்.
பார்ட்டி முடிந்த பிறகு பிற்பகல் 3:15 மணியளவில், கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவரான சதுதீனுடன் மைனர் சிறுவன் ஒருவனும் சிறுமியை அணுகி அவரை காரில் இறக்கிவிடுவதாக கூறி அழைத்துச் சென்று இந்தக் கொடூரத்தை செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்த 6 பேரில் சதுதீன் மாலிக் என்பவர் 18 வயது நிரம்பியவர். மற்றவர்களுக்கு மைனர் வயது. இதில் சதுதீன் மாலிக் உட்பட ஐந்து குற்றவாளிகள் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஐந்தாவது மைனர் பாலியல் மீறல் நடக்கும் முன்பாக, காரில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே 28-ஆம் தேதியன்று ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல பப் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருமே அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 11, 12 வகுப்பு மாணவ, மாணவிகள். அவர்களில் பலர் அரசியல், சிலர் அதிகாரப் பின்புலம் கொண்டவர்கள்.
இந்த விழாவில் 17 வயது சிறுமி ஒருவரும் பங்கேற்றுள்ளார். விருந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றபோது சில சிறுவர்கள், அந்த சிறுமியை அணுகி காரில் வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றி சென்றனர். ஆனால் செல்லும் வழியில் காரில் இருந்த 5 சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி உண்மையை கூற, அவரின் தந்தை, ஹைதராபாத் ஹூப்ளிஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கூறி பாஜக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சென்சேஷனல் விவகாரமாக இது மாறியுள்ளது. ஆளுநர் தமிழிசை நேரடியாக இந்த வழக்கை கண்காணித்து வருகிறார்.