ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை பெறப்பட்ட வழக்கில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் இன்று மீண்டும் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். சிறுமிக்கு 3 வயதுள்ள போது கணவர் சரவணன் பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தாய் இந்திராணி. தாய் இந்திராணி ஏற்கெனவே கருமுட்டை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக டெய்லரான மாலதி இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
சிறுமியின் கருமுட்டைகளை தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். மீண்டும் சிறுமியிடம் கருமுட்டை எடுக்க தயாரானபோது சிறுமி தனது சித்தியிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி, சிறுமியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜூன் 1ம் தேி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராணி, சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் வயதை ஆதாரில் உயர்த்தி காட்டிய ஜான் என்பரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்புடைய ஒவ்வொரு தனியார் மருத்துவமனை கருத்தரிப்பு மையங்களிலும் சுமார் மூன்று ஆண்டு ஆவணங்களை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றும் சிறுமியிடம் 14 வயது முதலே கருமுட்டை எடுக்கப்பட்டது என்றும் ஓசூரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தெற்கு காவல்நிலையத்தில் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் போலீசார், பெருந்துறை தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மருத்துவகுழுவினரின் அளித்த சில தகவல்களின் அடிப்படையில் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM